இந்திய கடல் வளத்தை சத்தமின்றி அழித்து வருகிறது சீனா ?

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவின் கடல் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும், கடல் அட்டைகளை சத்தமின்றி சாப்பிட்டு வருகிறது சீனா. ஆண்மை நீடிக்கும் என தன் நாட்டு மக்களை "உசிப்பி' விட்டதோடு, அதிக பணம் கிடைக்கும் என மீனவர்களை தூண்டி இந்திய கடல் வளத்தை அழித்து வருகிறது .முட்தோலிகளில் ஒரு முக்கிய இனம் கடல் அட்டை.
 குறைந்த கொழுப்புச்சத்தும், அதிக புரதச்சத்தும் உடையவை. உலகளவில் 650 இன கடல் அட்டைகளில் 75 இனங்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படுகின்றன. அனைத்துண்ணியான கடல் அட்டைகளால், இந்திய கடல் வளம் தூய்மைப்படுத்தப்படுகிறது. உலகளவில் இதன் தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அளவு வித்தியாசமின்றி அனைத்து கடல் அட்டைகளும் சேகரிக்கப்படுகின்றன. இழுவலை கொண்டு பிடிக்கப்படும் மீன்பிடிப்பால், இவற்றின் வாழ்விடங்கள் அழிகின்றன. கடல் தூய்மை கெட்டு வருகிறது. ராஜ அட்டை, வெள்ளை அட்டை இனங்கள் தற்போது அழிந்தேவிட்டன. இதன் காரணமாக, இந்தியாவில் எல்லா வகை அட்டைகளும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இவற்றை பிடிக்க கடந்த 2002 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகபண ஆசைக்கு தூண்டப்படும் மீனவர்கள், கடத்தி தரும் இந்த அட்டைகளை சிறு வியாபாரிகள் வாங்கி பெரு வியாபாரிகளிடம் தருகின்றனர். இவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2003 முதல் கடல் அட்டை கடத்தியதாக 165 வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டனை பெறவில்லை. கடத்தலுக்காக அதிகளவில் வியாபாரிகளும் உலா வருகின்றனர். கடல் அட்டைகளை பதப்படுத்துபவர்கள் வீட்டிற்கு அதிகாரிகள் நேரடியாக சென்றால், அங்கே உள்ள பெண்கள், அதிகாரிகள் எங்களை மானபங்கப்படுத்தி விட்டனர்' என கூறவும் தயங்குவதில்லை. இதனால் அதிகாரிகள், கடல் அளவிலேயே, அட்டை கடத்தலை தடுத்து வருகின்றனர்.சட்டத்தில் உள்ள ஓட்டைகள் கடத்தல்காரர்கள் தப்பிக்கவே வழி செய்வதாலும், தமிழகத்தில் ஒரு கிலோ அட்டை 3,500 ரூபாய்(வெளிநாட்டில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை) விலை போவதாலும் மீண்டும், மீண்டும் இதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் உள்ள பின்புலம் என்ன என்ற ஆராய்ச்சியில், சூழ்நிலை ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும், வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதில் அட்டை கடத்தலுக்கு தூண்டுகோலாக சீனா உள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே புலியின் உறுப்புகளை சாப்பிட்டால், "ஆண்மை பெருகும்; பல நோய்கள் தீரும்' என்ற வதந்தியை சீனா தனது நாட்டினரிடம் பரப்பி, இந்தியாவின் புலிகள் வளத்தையை சூறையாடியது. விழித்துக் கொண்ட இந்தியா அதன்பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவு, தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் ஆணி வேராக விளங்கும் கடல் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும் அட்டைகளை அழித்தால், மீன் வளம் அழியும். இதனாலேயே இந்திய கடல் அட்டைகள் குறித்து, தன் நாட்டினருக்கு புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகிறது சீனா. அதன் படி கடல் அட்டை "சூப்' சாப்பிட்டால், "ஆண்மை நீடிக்கும்' என்ற வதந்தியையும் பரப்பியது. இந்நாட்டவர்கள் கடல் அட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்கி சூப் செய்து சாப்பிட்டு வருகின்றனர். சத்தமின்றி நம் இயற்கை வளத்தை அழிப்பதற்கு சீனா எடுத்து வரும் முயற்சிக்கு உறுதுணையாக தமிழக மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த கடல் அட்டைக்கு இலங்கையில் தடை கிடையாது என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், இவற்றை கச்சத்தீவு அருகேயுள்ள ஐந்தாம் தீடை வரை கொண்டு சென்று, அங்கிருந்து வேறு படகுக்கு மாற்றி, இலங்கைக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து சீனாவுக்கு கடத்தப்படுகிறது. இதற்கு தமிழக மீனவர்களில் சிலர் உதவி வருகின்றனர் என்பது தான் வேதனை.

1 comment: