டேங்கர் லாரிகளின் காலவரையற்ற வேலை நிறுத்தம் !

சென்னை: டேங்கர் லாரிகளின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதனால், கேஸ் எடுத்துச் செல்லும் பணி முடங்கியது. எனவே வரும் நாட்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

சமையலுக்குத் தேவைப்படும் எல்பிஜி வாயு எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்களின் தென்மண்டல சங்கம் நாமக்கல்லில் இயங்குகிறது.




இந்த சங்கத்தில் 4100 லாரிகள் உள்ளன. ஒப்பந்த காலம் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். கடந்த அக்டோபர் 31-ந்தேதி இந்த டேங்கர் லாரிகளின் வாடகை ஒப்பந்த காலம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும், கூடுதலாக 600 டேங்கர் லாரிகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும், என தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எண்ணை நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி நாமக்கல்லில் தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் வாடகை உயர்த்தி தருதல் மற்றும் கூடுதலாக 600 டேங்கர் லாரிகளை இணைத்து கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கையை எண்ணை நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் 12-ந் தேதி நள்ளிரவு முதல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

தொடங்கியது வேலை நிறுத்தம்...

இதற்கிடையே கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் 3 எண்ணை நிறுவன உயர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க எண்ணை நிறுவன அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் டேங்கர் லாரி ஸ்டிரைக் நள்ளிரவு தொடங்கியது.

5 மாநிலங்களில் பாதிப்பு

இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளளது.

தமிழ்நாட்டில் 15 இடங்களில் கேஸ் நிரப்பும் தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் அத்திப்பட்டு, மணலியில் கேஸ் நிரப்பும் இடங்கள் உள்ளன. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஆங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட இந்த நேரத்தில் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கி இருப்பது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

No comments:

Post a Comment